Monday 9 July 2012

வன்னியர் வரலாறு கூறும் செப்பு பட்டயம்

        
                  இந்திய துணைக்கண்டத்தில ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தொழில் இருந்திருக்கிறது. சிலருக்கு ஆன்மிகம், சிலருக்கு போர், சிலருக்கு வணிகம், சிலருக்கு விவசாயம் என்று பல பல. இந்த வரிசையில் குறிப்பிட்ட ஒரு சாதியின் புகழ் பாடுவதையே குலத்தொழிலாக கொண்ட ஒரு சாதி இருக்கிறது. அந்த சமூகத்தின் பெயர் "சாதிப் பிள்ளை". இந்த சமூகத்தினர் "நோக்கர்" என்றும் அழைக்கபடுகின்றனர். நவுக்கர் என்ற வடமொழி சொல்லின் திரிபே நோக்கர். இதற்கு வேலைக்காரர் என்று பொருள்.

சாதிப் பிள்ளை என்பது தமிழ்நாட்டில் இடங்கை வலங்கை தகராறுகள் ஏற்ப்பட்ட போது இடங்கை சாதியினரை வாழ்த்திப் பாடுவதற்காக ஏற்பட்ட சாதி. இடங்கையில் பல்வேறு சாதிகள் இருந்தாலும் இடங்கைக்கு தலைமை தாங்கிய வன்னியரின் புகழ் பாடுவதையே இவர்கள் தொழிலாக செய்து வந்தனர். செய்தும் வருகின்றனர்.

வட தமிழ்நாட்டில் வன்னியர் வாழும் கிராமங்களில் திருவிழா நாட்களில் இவர்கள் வருவார்கள். வன்னியரின் பெருமையை சொல்லக்கூடிய 32  விருதுகள் மற்றும் பட்டங்கள் தொடர்பான பதாகைகளை ஏந்தியபடி வன்னியர் புராண பாடல்களை பாடுவார்கள்.

சாதிப் பிள்ளையின் ஒவ்வொரு தலைக்கட்டிலும் ஒரு செப்புபட்டயம் வைத்திருக்கின்றனர். இவற்றில் ஒன்றை 2004  ஆம் ஆண்டு கண்டுபிடித்தேன். கடலூர் மாவட்டம் கொஞ்சி குப்பத்தை சேர்ந்த திரு. முருகன் என்பவரிடம் இருந்து இதனை பெற்றேன். திரு. நடன. காசிநாதன் அவர்கள் இதனை படித்து  வன்னியர், வன்னியர் மாட்சி ஆகிய நூல்களில் விரிவாக எழுதி உள்ளார். 

இந்த செப்பு பட்டயத்தில் இடங்கை வலங்கை தகராறுகளும் வன்னியர் பெருமைகளும் சாதிப் பிள்ளைகள் செய்த தியாகமும் கூறப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் சாதிப் பிள்ளைகள் பற்றி எனக்கு அறிமுகம் செய்த திரு. இரத்தின. புகழேந்தி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  அவர் எழுதிய பல்வேறு ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பை அண்ணல் வெளியீடு சார்பில் கடந்த  ஆம் ஆண்டு "வன்னிய சாதிப் பிள்ளைகள்" என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டேன். இதில் சாதிப் பிள்ளை என்பது தான் சரி. வன்னிய சாதிப்பிள்ளை என்ற சொற்பிரயோகம் , இவர்களும் வன்னியர்களோ என்ற குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறது.  இவர்கள் வன்னியர்களின் ஊழியர்களே தவிர வன்னியர்கள் அல்ல.

இந்த நூல் வெளியான பின்னர் சாதிப் பிள்ளைகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு சங்கமாக ஒன்று சேர்ந்துள்ளனர்."தமிழ்நாடு சிம்ம அனுமந்தன் வன்னிய சாதிப்பிள்ளைகள் நல சங்கம்" என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட்ட  சங்கத்தை தொடங்கி உள்ளனர்.

சாதிப் பிள்ளை சமூகத்திற்கு ஒரு சிக்கல் இருக்கிறது. இந்திய அரசின் சாதி பட்டியலில் இவர்கள் சரியான வகையில் இடம்பெறவில்லை. இதனால் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் சாதி சான்றிதழ் பெற முடியாத நிலை உள்ளது.  எனவே வன்னியர் உள்ளிட்ட பல்வேறு சாதிகளின் பெயரில் பொய்யாக சான்றிதழ் வாங்கியே கல்வி பயின்று வருகின்றனர். அவர்களது இந்த அவல நிலை மாற்றப்படவேண்டும்.

இனி, செப்பு பட்டயம் உங்கள் பார்வைக்கு :                                    




செப்பு பட்டயத்தின் முன் பக்கம்

செப்பு பட்டயத்தின் பின் பக்கம்