Tuesday 26 June 2012

என் சேர நாட்டு பயணம்


கோடை விடுமுறையின் போது எங்காவது சுற்றுலா அழைத்து செல்வதாக என் மனைவி குழந்தைகளுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன். அதை நிறைவேற்ற தேர்ந்தெடுத்த இடம் கேரளா.

கேரளாவை பற்றி எனக்கு சில கருத்துக்கள் உண்டு. ஆயிரம் அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் கேரளா என்பது தமிழ்நாடே. மலையாளம் என்பது கேரளாவில் பேசப்படும் தமிழ். இயற்கை எழில் மிக்க அந்த மாநிலத்தில் குடும்பத்துடன் களிக்கவேண்டும்.

2012  மே 9  ஆம் தேதி பத்து நாட்களுக்கு தேவையான துணிமணிகளுடன் மனைவி இரண்டு குழந்தைகளோடு டோயோட்டோ லிவா காரில் சேலத்தை நோக்கி பயணத்தை நோக்கி பயணமானேன்.

சேலத்தில் வழக்குரைஞர் திரு.அங்கப்பன் சித்தப்பா வீட்டில் தங்கல்.
வழக்குரைஞர் திரு.அங்கப்பன் சித்தப்பா

மறுநாள் நாமக்கல் வெற்றி விகாஸில் +2  படிக்கும் மனைவியின் அக்காள் மகனை சென்று பார்த்தோம். பிரம்மாண்டமான கோழி பண்ணை போன்ற மாணவ பண்ணையில் படிக்கும் அவனால் கல்விக்கூட நெருக்கடிகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

கடுமையான பல் வலி என்னை வீட்டுக்கு அழைத்து சென்று விடுங்கள் என்றான். பள்ளியில் அனுமதி வாங்கி அவனை வெளியே அழைத்து சென்று வைத்தியம் பார்த்து பின்னர் மாலையில் மீண்டும் பள்ளியில் விட்டோம். பணத்தை கொட்டி சேர்த்தாகி விட்டது. எப்படியாவது சமாளித்து விட்டு படி என்று புத்தி சொல்லி புறப்பட்டோம்.

அங்கிருந்து கோயம்புத்தூர் போய் சேர இரவாகி விட்டது. எந்த விடுதியிலும் இடம் கிடைக்கவில்லை. தேடி தேடி அலைந்து ஒரு விடுதியில் இடம் பிடித்தோம். ஆயிரம் ருபாய் வாடகை. வெளியூர் பயணங்களின் போது போக்குவரத்து மற்றும் உணவை விட தங்குவதற்கு தான் அதிக செலவாகிறது.

11 . 05 .12 அன்று காலை பாலக்காடு நோக்கி கிளம்பினோம்.
        
இந்த பயணம் திட்டமிப்படாத பயணமாக இருக்கவேண்டும் என்று ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொண்டேன். அதாவது ஆலப்புழை நோக்கி செல்வது. வழியில் ஆறு, கோயில், குளம் என்று மனதை கவரும் எது எதிர்ப்பட்டாலும் அங்கு சென்று குழந்தைகளுடன் குதூகலிப்பது. இது தான் திட்டமில்லாத திட்டம்.

கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் நவக்கரை என்ற ஊரில் பிரம்மாண்ட நந்தி தென்பட்டது. வணங்கினோம்.

பிரம்மாண்ட நந்தி

அடுத்த ஒரு மணி நேர பயணத்தில் கேரளா மாநிலத்தில் உள்ள மலம்புழா அணை வந்தது. அதையொட்டி சிறு சிறு பூங்காக்கள். எங்கு பார்த்தாலும்
தமிழ் பேசும் மக்கள்.
மலம்புழா அணை யில்...
 
அணைக்கு அருகிலேயே Rock Garden என்ற வித்தியாசமான கலைக்கூடம் கேரளா அரசால் நடத்தப்படுகிறது. நம்மால் வீசி எறியப்படும் உடைந்த தேனீர் குவளைகள், பீங்கான் தட்டுகள், பியுஸ் கேரியர்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அழகிய கலை கூடம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மதில் சுவர் வித்தியாசமான முறையில் பெட்ரோல் டின்களின் வடிவத்தில் காணப்படுகிறது.  குறிப்பாக கேரளா உருவாக்கத்திற்கான கதையாக சொல்லப்படும் க்ஷத்ரியர்களை பார்ப்பனர்கள் அழிக்கும் வாமன அவதார சிற்பமும் வைக்கப்பட்டு உள்ளது.




அன்றிரவு திருச்சூரை அடைந்தப்போது கடுமையான மழை. பொதுவாக கேரளாவில் இரவு 8 மணிக்கெல்லாம் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து விடுகிறது. இரவு 11  மணிவாக்கில் மழையும் பெய்தால்..... விசாரித்து ஒரு விடுதியில் இடம் பிடிப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது.

அடுத்த நாள் கேரளாவின் அடையாள சின்னமான திருச்சூர் வடக்குநாதர் கோயிலுக்கு சென்றோம். இங்கு தான் பூரம் விழா நடத்தப்படும். அதாவது வரிசையாக யானைகளை நிற்கவைத்து நடத்தப்படும் புகழ்பெற்ற விழா. இந்த விழாவில் எடுக்கப்படும் படங்களை தான் கேரளாவின் அடையாளமாக காட்டுவார்கள்.

ஆண்கள் சட்டையை கழற்றி விட்டு தான் கோயிலுக்கு செல்லவேண்டும். உள்ளே தூய்மை, பராமரிப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது ஆனால் தமிழக கோயில்களின் சிற்பக்கலையம்சங்கள் ரொம்ப குறைவு.

வடக்குநாதர் கோயில் எனப்படும் இந்த சிவன் கோயிலை சுற்றி இருக்கும் ஊர் தான் திருச்சூர். இவ்வூரை வலம்வர ஓரிரு மணிநேரங்கள் போதும்.   
  
கேரளாவில் மதிய சாப்பாட்டு நேரம் கொடுமையானது. எந்த உணவகத்திற்கு சென்றாலும் மதிய சாப்பாட்டிற்கு குண்டு அரிசியால் செய்யப்பட சிவப்பு சோற்றை தருவார்கள்.  ஒயிட் ரைஸ் என்று கேட்டால் நம்மூர் சோறு தருவார்கள். எதுவாக இருந்தாலும் அவர்களது சாம்பார், ரசம், மற்றும் மஞ்சள் நிற மோர் ஆகியற்றை சாப்பிடுவது சவாலானது.

வடக்குநாதர் கோயில் வளாகத்தில் இருக்கும் போதே சென்னையில் இருந்து எழுத்தாளரும் கட்டிடக்கலை வல்லுனருமான திரு. குணதிலக் அவர்கள் தொலைபேசியில் பேசினார்.

எங்கே இருக்கிறீர் என்றார். கேரளாவில் என்றேன் . திருச்சூர் பக்கம் போய் நமது வன்னியகுல க்ஷத்ரிய சமுதாயத்தை சேர்ந்த கொச்சி திவான் தெய்வத்திரு. சுப்பிரமணியம் பிள்ளை அவர்களின் சமாதியை கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்டார்.

திருச்சூரில் வடக்குநாதர் கோயில் அருகே இருக்கிறேன் என்றதும் அவருக்கு சிலிர்த்துவிட்டது. எப்படியாவது அவர் வாழ்ந்த இடத்தை கண்டுபிடியுங்கள் என்றார்.

சரி விவரங்களை கொடுங்கள்.

"வடக்குநாதர் கோயில் அருகே இருக்கிறது வடக்கன் அங்காடி. அங்கே தான் கொச்சி திவான் தெய்வத்திரு. சுப்பிரமணியம் பிள்ளை அவர்களின் மகன் தெய்வத்திரு. ராமநாதன் பிள்ளை அவர்கள் வாழ்ந்தார். அவரது வீட்டின் அருகே பூங்குன்னம் ரயில் நிலையம் இருக்கும். சீதாராம் மில்ஸ் ரோடு அருகே ..." இது தான் திரு. குணதிலக் அவர்கள் கொடுத்த தகவல்.

திருச்சூரில் விசாரித்தால் வடக்கன் அங்காடியை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் என்று விசாரித்து அந்த இடத்தை அடைந்து விட்டேன்.

திருச்சூரில் பாலக்காடு பிராமின்ஸ் என்று சொல்லப்படும் பார்ப்பனர்கள் வசித்து வருகின்றனர். தமிழ் தான் பேசுகின்றனர். உண்மையில் இவர்கள் தமிழர்களே. இவர்களின் உதவியுடன் வடக்கன் அங்காடி பகுதிக்கு சென்றபோது இருட்டி விட்டது.

பட்டறைக்கல் சந்திப்பு 

அழகிய பங்களாக்கள் நிறைந்த அந்த பகுதியில் நடந்த போது ஒரு கடையின் பெயர் பலகையில் Vellore colony  என்ற பெயர் கண்ணில் பட்டது.

வேலூர் காலனி என்ற பெயர் தாங்கிய கடையின் பெயர் பலகை
வேலூர் காலனி என்பதை குறிக்கும் மலையாள பெயர் பலகை

மறுநாள் மீண்டும் தேடுதல் வேட்டை. வடக்கன் அங்காடி என்ற பெயர் தற்போது புழக்கத்தில் இல்லை. பட்டறைக்கல் என்பது அந்த பகுதியின் பெயர். பல்வேறு முக்கிய ஊர்களின் சந்திப்பாக இந்த ஊர் விளங்குகிறது.

இன்று மீண்டும் ஒரு பாலக்காடு பார்ப்பனரை பிடித்தேன்.  இந்த வேலூர் காலனியின் கடைசியில் ராதா கிருஷ்ணன் என்பவர் இருக்கிறார். அவர் திருச்சூரின் முன்னாள் மேயர் அவரை சந்தித்தால் உங்களுக்கு உதவுவார் என்றார். வாழ்க.

முன்னாள் மேயரின் வீடு ஒரு பசுமை இல்லம். தொட்டிகளும் மலர்செடிக்களுமாக அழகோ அழகு..சுமார் 500 சதுர அடி இருக்கும். மேயரின் மனைவி செடிகள் வளர்த்து, தூய்மை காத்து கண்களில் ஒத்தி கொள்ளும் வகையில் வீட்டை வைத்திருக்கிறார்.

மேயர் வீட்டின் அழகு செடிகள்

மேயரை பார்த்தேன்.

"அய்யா. நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன்.எங்கள் உறவினர் சுப்பிரமணியம் பிள்ளை கொச்சி திவானாக இருந்தார். அவர் மகன் ராமநாதம் பிள்ளை இங்கு தான் வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய சொத்துக்களை தனது ஓட்டுநருக்கே கொடுத்துவிட்டு காலமாகி விட்டார். அவரது சமாதியை பார்க்கவும் ஆய்வு செய்யவுமே திருச்சூர் வந்துள்ளேன் உங்கள் உதவி தேவை."   
                                                  
  திரு. ராதாகிருஷ்ணனுக்கு தமிழும் தெரிந்து இருக்கிறது, நமது திவான் குடும்பத்தை பற்றியும் தெரிந்திருக்கிறது.

கொச்சி திவான் தெய்வத்திரு. சுப்ரமணியம் பிள்ளை, கொச்சி சமஸ்தானத்தில் அரசருக்கு சமமாக வாழ்ந்துள்ளார். அவரது ஒவ்வொரு பிள்ளைகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட ராமநாதம் பிள்ளை மட்டும் திருச்சூரிலேயே தங்கி விட்டார். அவருக்கு குழந்தைப்பேறு இல்லை

வடக்கன் அங்காடியின் பெரும்பகுதி நிலம் ராமநாதம் பிள்ளையிடம் இருந்துள்ளது. பட்டறைக்கல் சந்திப்பு அருகே வேலூர் ஹவுஸ், வேலூர்
காட்டேஜ் என்ற பெயர்களில் பிரமாண்ட மாளிகைகளை கட்டி வாழ்ந்துள்ளார். மேலும் வேலூர் காலனி என்ற பெயரில் குடியிருப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இரண்டாம் உலக போரின் போது தமிழ்நாட்டில் இருந்து தஞ்சம் தேடி வந்த உறவினர்கள் தங்குவதற்கு இந்த வீடுகளை கொடுத்திருக்கிறார்.                    
 
இவற்றில் ஒரு வீட்டில் தான் ஈழவர் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் மேயர் திரு. ராதா கிருஷ்ணன் தனது பெற்றோர்களின் காலத்தில் இருந்து வசித்து வருகிறார்.

ராமநாதம் பிள்ளையிடம் முத்துசாமி கோனார் என்பவர் குதிரை ஓட்டுபவராக பணியாற்றி உள்ளார். கேரளாவில் இருந்த ராமநாதம் பிள்ளையின் அனைத்து சொத்துக்களும் முத்துசாமி கோனாருக்கு கைமாறி விட்டன. ராமநாதம் பிள்ளை இறந்து சில நாட்கள் கழித்தே  அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ராமநாதம் பிள்ளையின் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் ஏற்கனவே பெரும் சொத்துக்களுடன் இருந்ததால் கேரளா சொத்துக்களை கவலை படவில்லை போலும்.

முத்துசாமி கோனாருக்கு குடிப்பழக்கம். கூடவே இரண்டு மனைவிகள். இந்த பிரச்சனைகளால் கோனார், முதலாளியிடம் இருந்து பெற்ற அனைத்து சொத்துக்களையும் இழந்து போனார்.

முத்துசாமி கோனாரின் முதல் மனைவியின் தம்பியான மணி என்பவர் தற்போதும் வாழ்ந்து வருகிறார்.

இவையெல்லாம் திரு. குண திலக் அவர்களும் திரு. ராதா கிருஷ்ணன் அவர்களும் கொடுத்த தகவல்களின் சாரம்.  

ராமநாதம் பிள்ளை வேலூர் காலனியில் கட்டிய சில வீடுகள் இன்னமும் பழமை மாறாமல் இருக்கின்றன. அவர் நட்டு வைத்த மாமரங்கள் மூன்று மாடி கட்டிடத்துக்கும் மேலாக உயர்ந்து காய்த்து குலுங்ககின்றன.

அவர் வாழ்ந்த வேலூர் ஹவுஸ் இடிக்கப்பட்டு அங்கு பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது. வேலூர் காட்டேஜ் இருந்த இடத்தில் வேறொரு பங்களா கட்டப்பட்டு இருக்கிறது.

முன்னாள் மேயர் திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் தன் வீட்டில் இருந்த பூந்தொட்டி ஒன்றை காட்டினார். அது ராமநாதம் பிள்ளையுடையதாம். பிள்ளை அவர்கள் காலத்து ராட்டினத்தையும் மேயர் பயன்படுத்தி வருகிறார்.

ராமநாதம் பிள்ளை பயன்படுத்திய பூந்தொட்டி

ராமநாதம் பிள்ளை காலத்து ராட்டினம்
 வேலூர் ஹவுஸ் பகுதியில் சமாதி ஒன்று இருந்துள்ளது. அது திவான்  அல்லது அவரது மகன் தெய்வத்திரு. ராமநாதம் பிள்ளையுடையதாக இருந்திருக்க வேண்டும். அதனை தனது இளம் வயதில் திரு. ராதாகிருஷ்ணன் ( தற்போது இவரது வயது 62 ) பார்த்திருக்கிறார்.

சமாதி இருந்த இடத்தில் தற்போது மாளிகை ஒன்று இருக்கிறது.

ராமநாதம் பிள்ளை பயன்படுத்திய கிணறு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. இந்த இடத்தில் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு. ஷெரிப் அவர்கள் வசித்து வருகிறார்.
ராமநாதம் பிள்ளை பயன்படுத்திய கிணறு

திரு. ராதாகிருஷ்ணன், திரு. ஷெரிப் ஆகியோருடன் நான்.

ராமநாதம் பிள்ளை வாழ்ந்த வீட்டு வளாகத்திலேயே குளம் ஒன்று இருந்திருக்கிறது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான அந்த குளத்தில் தற்போது வாழைத்தோட்டம் காணப்படுகிறது.

வாழ்வாங்கு வாழ்ந்த அந்த மனிதர் திருமண மண்டபம் ஒன்றை கட்டி கேட்டவர்களுக்கு எல்லாம் இலவசமாக வழங்கி இருக்கிறார். 1950  களில் திருச்சூரில் திருமண மண்டபங்களை வசதியானவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியுமாம். அப்படி பட்ட காலத்தில் தான் நமது பிள்ளை இலவசமாக வழங்கி இருக்கிறார்.

அந்த மண்டபத்தை மீண்டும் பார்க்கவும் முத்துசாமி கோனாரின் மைத்துனரை
( முதல் மனைவியின் தம்பி மணி) எனக்கு அறிமுகப்படுத்தவும் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் என்னுடன் காரில் புறப்பட்டார்.

வேலூர் காலனியில் இருந்து பட்டறைக்கல் சந்திப்புக்கு வந்து புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் மீது ஏறி இறங்கியவுடன் இடது புறம் திரும்பினால் கடைசியில் இருக்கிறது மணி கோனாரின் வீடு.

தமிழ்நாட்டு இடையர் வீடுகளை போலவே ஆடு, மாடு, கோழிகள் சூழ தனது மகன் மற்றும் பேரன் பேத்திகளுடன் வசித்து வருகிறார் மணி.

மேயரோடு சென்றதால் நமக்கும் நல்ல மரியாதை. நம்மை அறிமுகம் செய்துவிட்டு, இவர்கள் சொத்துக்காக வரவில்லை வரலாற்று ஆய்வுக்காக வந்திருக்கிறார்கள் என்று புரியவைத்து மண்டபம் எங்கே என்று கேட்டார்.

வீட்டுக்கு மிக அருகிலேயே காட்டுகொடிகளால் மறைக்கப்பட்டு அடர்ந்த மரங்கள் முளைத்த ஒரு பாழடைந்த மாளிகையை காட்டினார் மணி. அதுதான் ராமநாதம் பிள்ளையின் திருமண மண்டபம்.

செடிகொடிகளை உடைத்து தைரியமாக உள்ளே போன ராதாகிருஷ்ணன் அவர்கள் மண்டபத்தின் கல்வெட்டை கண்டுபிடித்தார். கட்டிடத்தின் உள்ளே கூரை இல்லை. பச்சை மரங்கள் தான் கூரையாக கிளைப்பரப்பி நின்றன.

மண்டப கல்வெட்டின் முன் திரு. ராதாகிருஷ்ணன்

   

மண்டபத்தின் இன்னொரு பகுதிக்கு செல்ல அரிவாளால் மரங்களை வெட்டி வழி ஏற்படுத்தினார் மணி கோனார். அங்கு திவான் சுப்பிரமணியம் பிள்ளையின் நினைவு கல்வெட்டு இருந்தது. அது சமாதியாகவும் இருக்கலாம்.
திவான் சுப்ரமணியம் பிள்ளை அவர்களின் நினைவு கல்வெட்டு. 
 கல்வெட்டில் உள்ள வாசகம்

  DIWAN V. SUBRAMANIYAM PILLAI, B.L.,

  BORN IN 
   KUMBAM 1009 M.E., (Malayalam Era)
   FEBRUARY 1834 A.D.

  CHIEF JUDGE OF COCHIN 
   1042 M.E. TO 1068 M.E.
   1866 A.D. TO 1893 A.D.

  DIWAN OF COCHIN
   1068 M.E. TO 1072 M.E.
   1893 A.D. TO 1896 A.D.

   DIED IN MEDOM
   1075 M.E.
   1900 A.D.

  FATHER'S ANNIVERSARY
  SUKLAPAKSHAM
  THRAYODESI IN 
   MEDOM APRIL

 MOTHER'S ANNIVERSARY
  KRISHNAPAKSHAM
  DWADESI IN 
  MEENAM APRIL 

ERECTED BY THEIR SON 
V.RAMANATHAM PILLAI

IN 1124 M.E.
      1948 A.D.

பின்னர் திவான் தர்பார் செய்த திருச்சூர் அரண்மனைக்கு அழைத்து சென்றார் மேயர். அரண்மனையில் பராமரிப்பு பணி நடப்பதாலும் உள்ளே விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாலும் பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மேயர் உடன் வந்ததால் அரண்மனை வளாகத்தை பார்வையிட்டோம்.


திருச்சூர் அரண்மனை முன்பு...

பிறகு ஆசியாவின் உயரமான கோபுரங்களில் ஒன்றாக சொல்லப்படும் திருச்சூர் பைபிள் டவருக்கு அழைத்து சென்றார். அதன் உச்சியில் இருந்து ஒட்டுமொத்த திருச்சூரையும் பார்க்க முடிகிறது.

ஒரு காலத்தில் ஓடுகள் என்றாலே மலபார் தான். அதாவது திருச்சூர் தான் அந்த தொழிலுக்கு உயிரான ஊர். தற்போது அந்த தொழிலே அங்கு நடைபெறுவது இல்லையாம்.

மேயரிடம் இருந்து நன்றியோடு விடைபெற்று கொச்சிக்கு காரை திருப்பினேன்.

நாங்கள் சென்ற நேரத்தில் கொச்சி புனித ஜார்ஜ் கோயிலில் திருவிழா. இந்து மத தெய்வங்கள் அரக்கனை அழிப்பதுபோல், புனித ஜார்ஜும் வினோத ஜந்து ஒன்றை வதைத்து கொண்டு இருந்தார். அந்த கோயிலின் பெயர் பலகை தமிழில் தப்பும் தவறுமாக காட்சி அளித்தது. கொச்சியில் தமிழர்களே இல்லையா? இப்படி ஒரு தமிழ் கொலையை யாரும் தடுத்து நிறுத்த கூடாதா?


அடுத்த நாள் Wonderla. நகரத்தை விட்டு சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் சிறிய மலை ஒன்றை விலைக்கு வாங்கி இந்த பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்கி உள்ளனர். பெரியவர்களுக்கு ருபாய் 500 . குழந்தைகளுக்கு ருபாய் 400 கட்டணம். சீசன் நாட்களில் இந்த கட்டணம் மேலும் கூடுமாம்.



நாங்கள் சென்றபோது ஒரே கூட்டம். நீர் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட அரை மணிநேரம் வரிசையில் நிற்கவேண்டி வந்தது. கிறுகிறுக்க வைக்கும் ராட்டினங்களில் நான் ஏறுவது கிடையாது. ராட்டினம் சுற்றியும் நீரில் விளையாடியும் குழந்தைகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அடுத்து ஆலப்புழைக்கு காரை செலுத்தினோம். இது கேரளாவின் தண்ணீர் மாவட்டம். தென்னகத்தின் வெனிஸ்.



பேருந்து, ரயில் பயணங்களை போல ஆலப்புழையில் படகு பயணம். அரசே பயணிகள் படகை இயக்குகிறது. இது தவிர Boat House எனப்படும் படகு இல்லங்கள் தான் ஆலபுழையின் highlight . Prepaid  ஆட்டோ , டாக்ஸி போல கேரளா அரசின் சுற்றுலா துறை படகு கட்டணங்களை முறைப்படுத்தி வசூலிக்க தனி அலுவலகம் வைத்துள்ளது. அந்த அலுவலகத்தை அடைவதற்குள் தரகர்கள் அணுகி அதிக காசு வாங்கி விடுகின்றனர்.

தங்கும் விடுதிகளை போலவே Single bedroom, Double bedroom கொண்ட படகு இல்லங்கள் உள்ளன. ஏழு படுக்கை அறைகள் கொண்ட படகு இல்லங்களும் உள்ளனவாம்.    

சராசரியாக இரட்டை படுக்கை கொண்ட அதாவது ஒரே ஒரு அறை கொண்ட ஒரு படகு இல்லத்திற்கு ரூ. 6500  வாடகைக்கு வாங்கப்படுகிறது. பயணிகள் ஏமாறுவதை பொறுத்து இதற்கே 15000 ருபாய் வாங்கிவிடும் தரகர்களும் உண்டு.

நாங்கள் இரட்டை படுக்கை கொண்ட படகு இல்லத்தை தேர்வு செய்தோம். காலை 11  மணிவாக்கில் படகு புறப்பட்டது. Checkout  time  22  hours . அந்த ஒரு நாளைக்கு நான் தான் படகின் அரசன். என் மனைவி அரசி. குழந்தைகள் இளவரசிகள்.




காயல் எனப்படும் backwater  தான் ஆலப்புழையில் ஓடும் தண்ணீர். இங்கு தான் புகழ்பெற்ற பாம்பு படகு பந்தயம் நடைபெறும். படகு துறையின் இருபுறங்களிலும் வீடுகள் காணப்படுகின்றன. ஒரே ஒருவர் அமர்ந்து கொண்டு ஓட்டுவது போன்ற படகுகளை மக்கள் மிதிவண்டிகள் போல் உபயோகிக்கிறார்கள். மோட்டார் படகுகள் மோட்டார் சைக்கிளுக்கு சமமானவை.

நம்மூரில் நடக்கும் தள்ளுவண்டி வியாபாரத்தை போல ஆலப்புழையில் படகுகளில் வந்து காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்கின்றனர்.   

அரை ஏக்கர், ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள சிறு சிறு தீவுகளை கூட காணமுடிகிறது.


படகு இல்லத்தில் ஒரு மாலுமி மற்றும் சமையல்காரர் உடன் வருகின்றனர். படகு கிளம்பிய ஒரு மணி நேரத்துக்கு எல்லாம் ஏதோ ஒரு கரையில் நிறுத்துகிறார்கள். அங்கே தின்பண்டங்கள் மற்றும் மீன்கள் விற்க்கப்படுகின்றன. மீன் வாங்கி கொடுத்தால் படகில் சமைத்து தருவார்கள். ஆனால் ஒரு கிலோ இறால் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. ஆளுக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து படகை எடுக்க சொல்லிவிட்டேன்.



படகு மாலுமி மற்றும் சமையல்காரருடன்...
எனக்கு முன்பு படகில் போனவர்கள்  2000  ரூபாய்க்கு மீன் வாங்கி கொடுத்தார்களாம். சமையல்காரர் சொன்னார். யப்பா! எனக்கு அது கட்டுப்படி ஆகாது.

மதிய உணவுக்காக படகு வேறொரு இடத்தில் நிறுத்தப்படுகிறது. மீன் வறுவலுடன் மூன்று வகை பொரியல், சாம்பார், ரசம், மோருடன் உணவு சமைத்து வைக்கப்படுகிறது.

மீண்டும் பயணம். மாலை ஐந்து மணி வாக்கில் கரையில் நிறுத்தி அங்கிருந்து மின்சாரமும் கேபிள் டிவி இணைப்பும் எடுத்து கொள்கின்றனர். இரவில் குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது.

                           

மறுநாள் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. முதல் நாள் சுமார் 7  மணிநேரம் கடந்த தூரத்தை இன்று அரைமணி நேரத்தில் சென்றடைந்தார் படகுக்காரர். அதாவது ஒரு சிறிய அளவு தூரத்தையே முதல் நாள் மெதுவாக கடந்திருக்கின்றனர்.

ஆலப்புழையில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் பத்திரமணல் என்ற தீவு இருக்கிறது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த தீவிற்கு மோட்டார் படகில் சென்றோம்.



ஆளே இல்லாத தீவு அது. அந்த இடத்திலும் ஈழவர்கள் SNDP ( Sri  Narayana Guru  Dharma  Paripaalanam ) என்ற அமைப்பின் சார்பில் கோயில் கட்டி உள்ளனர். கோயிலுக்கான எந்த அம்சமும் இல்லாத சிறு கட்டிடம் அது.



தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலைகள் இருப்பது போல கேரளாவில் நாராயணகுரு சிலைகள் காணப்படுகின்றன. நம்மூரை போல் இரும்பு கூண்டுக்குள் இல்லாமல் கண்ணாடி கூண்டுக்குள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. SNDP  அமைப்பின் கோயில்களும் ஆயிரக்கணக்கில் உள்ளன.

பத்திரமணல் தீவு விதவிதமான மாங்க்ரோவ் மரங்களுடன் காணப்படுகிறது. மரங்களை போன்று பெரியதாக தோன்றும் கொடிவகைகளும் ஆச்சரியப்படுத்துகின்றன.



அங்கிருந்து மூணார் செல்லும் வழியில் திருப்புனித்துரா(றை) அரண்மனைக்கு சென்றோம். தற்போது அருங்காட்சியகமாக இந்த அரண்மனை செயல்பட்டுவருகிறது.

திருப்புனித்துரா(றை) அரண்மனை முன்பு

தமிழ்நாட்டு அருங்காட்சியகத்தை போல் இல்லாமல் ஒவ்வொரு பகுதியிலும் ஊழியர்கள் பார்வையாளர்களுக்கு விளக்கம் கொடுக்கின்றனர்.

கொச்சி சமஸ்தானத்தின் தலைநகராக திருச்சூரை போலவே திருப்புனித்துராவும் விளங்கி இருக்கிறது.

இந்த அருங்காட்சியகத்தில் வன்னியகுல க்ஷத்ரிய சமுதாயத்தை சேர்ந்த திவான் தெய்வத்திரு. சுப்பிரமணியம் பிள்ளையின் படம் தவிர மற்ற அனைத்து திவான்களின் படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த அநீதி களையப்படவேண்டும்.

போர்த்துகீசியரான வாஸ்கோடகாமா கி.பி. 1500 களில் கேரளா வந்திருந்த போது கேரளா அரசருக்கு அன்பளிப்பாக அளித்த தங்க கிரிடம் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

பின்னர் மூணாறை   நோக்கி காரை செலுத்தினோம். மூணாறு கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள். தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் அடாவடியால் மூணாறு உள்ளிட்ட பகுதிகள் கேரளாவுக்கு போயின. இப்பகுதி தமிழர்கள் இன்னமும் காமராஜாரை திட்டுகின்றனர்.

மூணாறை   அடைவதற்கு முன்னால் 'அடிமாலி' என்ற ஊர் இருகின்றது. இங்கு தான் அறை எடுத்து தங்கி இருந்தோம். நாங்கள் சென்ற நேரத்தில் இடுக்கி மாவட்டத்தில் பந்த் நடைபெற்றது. அடிமாலியில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் ஈழவர்கள் சார்பில் விழா ஒன்று நடைபெற்றதால் அந்த விழாவுக்கு பந்த்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. SNDP  சார்பில் நடைபெற்ற அந்த விழாவின் போது சிவன் கோயிலில் வைணவ அர்ச்சனை பாடல்கள் பாடப்பட்டன.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளம் மூணாறு. தேயிலை தோட்டங்கள் பச்சை மரங்கள் என மலையின் ரம்மியத்தை அளவிட வார்த்தைகள் இல்லை. மூணாறில் நண்பர் திரு. ஜோதி ராஜமன்னார் அவர்களின் உறவினர்கள் வசித்து வருகின்றனர். தேயிலைத்தோட்ட குடியிருப்பில் இருக்கும் அவர்கள் வீட்டிற்க்கு சென்றோம். எதிரிலேயே சிற்றோடை. கால் வைத்தால் ஜிலீர் உணர்வு. அந்த ஓடையில் இன்னொரு சிறிய ஓடை ஒன்று கலக்கிறது. அந்த தண்ணிரில் கால் வைத்தால் கூடுதல் குளிர்ச்சியாக இருக்கிறது.


                 
 தண்ணிரில் நிற்கும் போதே இன்னொரு அற்புத காட்சி. பட்டாம் பூச்சிகளை போல் அழகிய வண்ணங்கள் கொண்ட தும்பி ஒன்று பாறையில் அமர்ந்தது.  சீசன் காலத்தில் மூணாரே இது போன்ற வண்ண தும்பிகளால் நிறைந்திருக்குமாம்.


ஜோதியின் அத்தை மகன் திரு. ஜெயக்குமார் அவர்கள் strawberry  தோட்டத்திற்கு அழைத்து சென்றார். Strawberry  ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி ஆவதாக நினைத்துகொண்டிருந்த எனக்கு மூணாறில் விளைவதும் விளைந்த இடத்திலேயே பறித்து தின்ன வாய்ப்பு கிடைத்ததும் ஆச்சரியமாக இருந்தது.

Strawberry  செடி தக்காளி, மிளகாய் செடியை போன்ற ஒரு பயிர்.

Strawberry தோட்டத்தில் இருந்து திரும்பிய போது எனது கால் சட்டையின் கணுக்கால் பகுதி ரத்தத்தால் நனைந்திருந்தது. பாதத்தில் இருந்தும் ரத்தம் ஒழுகி கொண்டிருந்தது. எனக்கு வலி தெரியவில்லை, இரத்தம் வந்ததற்கான காரணமும் தெரியவில்லை.

ஜெயகுமார் எனது செருப்பை கழற்ற சொன்னார். பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையே அட்டை ஒன்று ரத்தம் குடித்துகொண்டிருந்தது. அதனை கிள்ளி எறிந்து கோழிக்கு இரையாக போட்டார் ஜெயா.  கணுக்கால் பகுதியில் ரத்தம் குடித்த அட்டை போதிய அளவு குடித்து விட்டு எங்கோ விழுந்து விட்டது.                                         

விழுப்புண்ணோடு விடைபெற்றோம்.

மூணாறில் இருந்து கிளம்பி தொடர்ந்த கொண்டைஊசி வளைவுகள் வழியே மலையிறங்கி போடி வழியாக தேனியை அடைந்தோம். என்னோடு சன் தொலைகாட்சியில் பணியாற்றிய திரு. பழனிவேல்ராஜன் அறை தேடி கொடுத்தார். அவருக்கு நன்றி.

அடுத்த நாள் பெரியகுளம் சென்றோம். பெரியகுளம் சன் செய்தியாளர் திரு. பன்னீர்செல்வம் அன்போடு வரவேற்றார். பன்னீர் விளையாட்டு வீரர். அவரது உறவினர் திரு. சூரியமூர்த்தி உடன் இணைந்து ஆண்டு தோறும் இந்திய அளவில் கூடைப்பந்து போட்டிகளை நடத்தி வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு வயது குழந்தையுடன் சென்ற என்னை போட்டியின் சிறப்பு விருந்தினராக அமரவைத்து அழகு பார்த்தார். 2012 ஆம் ஆண்டு அதே குழந்தைக்கு 7  வயதாகும் போது அவரை மீண்டும் சந்திக்கிறேன். இந்த முறையும் போட்டி நடந்துகொண்டிருந்தது.

திரு. சூரிய நாராயணன் மற்றும் திரு. பன்னீர் செல்வம் அவர்களுடன் நான்... 

சிறுகுழந்தைகளை மகிழ்விப்பதற்காக நண்பரின் மாந்தோப்புக்கு அழைத்து சென்றார் பன்னீர். தோப்புக்கு நடுவே சிறிய அருவியுடன் கூடிய சிற்றாறு. குழந்தைகளுடன் நானும் இறங்கி குழந்தையானேன். நன்றிகள் பன்னீர்.     
    


திண்டுக்கல் திருச்சி வழியே அடுத்தநாள் பெரம்பலூர். சன் செய்தியாளர் திரு. சொல்லின் செல்வன் சந்தித்தார். அன்பு காட்டினார். பெரம்பலூர் அருகே உள்ள சாத்தனூரில் தான் கல்மரப்பூங்கா உள்ளது. புவியியல் அதிசயங்களில் குறிப்பிடத்தக்கது கல்மரம். சுமார் 18  அடி நீளமுள்ள கல்மரம் இங்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைனோசர் முட்டை என்று கருதப்படும் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.



என் குழந்தைகளுக்கு wonderla வும் தெரிய வேண்டும். கல்மரப்பூங்காவும் தெரியவேண்டும். இது தான் பயணத்தின் நோக்கம் என்றாலும் என் குழந்தைகளுக்கு கற்று கொடுக்கிற சாக்கில் நான் கற்றுகொள்கிறேன்.

11  நாள் பயணம். மொத்தம் 1818  கிலோ மீட்டர். இன்னும் ஒருவருடத்திற்கு என் மனைவியும் குழந்தைகளும் அடுத்த பெரிய சுற்றுலாவை கேட்க முடியாது.

இந்த பயணங்களில் பசுமையான நினைவுகளை மட்டும் அல்லாது பசுமையான மரக்கன்றுகளையும் கொண்டு வந்திருக்கிறேன். திருச்சூர் முன்னாள் மேயர் திரு. ராதாகிருஷ்ணன், 'சாம்ப பழம்' எனப்படும் மரத்தில் விளையும் தக்காளி போன்ற சுவையான பழம் தரும் மரக்கன்றுகளை ஒரு உறையில் போட்டுத்தந்தார். அவர் வீட்டில் விளைந்திருந்த பட்டை இலை (மசாலாவுக்கு போடப்படும் காய்ந்த இலை மற்றும் பட்டை). மரத்தின் விதைகளையும் அந்த உறையில் போட்டார். ஒரு வாரம் ஈர மண்ணில் இருந்ததில் அந்த விதைகள் முளைத்து விட்டன. 

இந்த மரங்கள் என் தோட்டத்தின் ஏதோ ஒரு பகுதியில் விளைந்து சேர நாட்டு பயணத்தை நினைவூட்டி கொண்டே இருக்கும்.